Incident happened by a boyfriend for A problem arose in an extramarital relationship
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இது குறித்து விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் சாலா என்றும், அவர் தர்மபூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சாலாவிற்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாகப் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலாவிற்கு பேஸ்புக் மூலமாக சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை பூசாரியூர் காட்டுவளவைச் சேர்ந்த 35 வயதான பார்த்திபன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பார்த்திபனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வரும் பார்த்திபனும் சாலாவும் ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை மாற்றிக்கொண்டு நட்பாகப் பேசி வந்துள்ளனர். ஆனால் அது காலப்போக்கில் இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்க, பின்னாளில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. அதன் காரணமாக இருவரும் அவ்வப்போது சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். மேலும், தனது வீட்டுச் செலவுக்காக சாலா, பார்த்திபனிடமிருந்து இதுவரை 7 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் பார்த்திபன் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். மேலும், “வட்டிக்கு வாங்கிதான் உனக்குப் பணம் கொடுத்தேன். என்னால் தற்போது வட்டி கட்ட முடியவில்லை. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடு” என்றும் பல முறை பார்த்திபன் கேட்டுள்ளார். ஆனால் சாலா பணத்தைக் கொடுக்காததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில் தான் சம்பவத்தன்று சாலாவும் பார்த்திபனும் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இருவரும் தனிமையில் இருந்தபோது பார்த்திபன் தனக்குத் தர வேண்டிய பணத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பார்த்திபன் சாலாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற அவர் சேலத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த நபர், போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் பார்த்திபனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஏற்காட்டில் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு உரிய அனுமதி பெறாததையும் போலீசார் கண்டறிந்தனர். மேலும் விசாரணையில், அனுமதி பெறாமல் சொந்த வீட்டைத் தனியார் தங்கும் விடுதியாக மாற்றிப் பயன்படுத்தி வந்ததால் அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்தனர். திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை ஆண் நண்பரே கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us