திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புறவழிச்சாலை, பூளவாடி ரவுண்டானாவில் மூர்த்தி என்பவர் பஞ்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஒரு லாரியின் டயருக்கு பஞ்சர் ஏற்பட்டதாக நினைத்து, தொழிலாளர் ஒருவர் டயரை கழற்றி பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில் டயரில் எந்தவித பஞ்சரும் இல்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் டயரைப் பொருத்தி, காற்று நிரப்பும்போது, சுமார் 30 சதவீதம் காற்று ஏற்றப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக டயர் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதில் காற்று நிரப்பிக் கொண்டிருந்த தொழிலாளி பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர், சில நிமிடங்கள் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாகக் கடை உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அவரது உடலில் எந்தவிதக் காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பினார். இந்த விபத்து சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பஞ்சர் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், “சார், நாங்கள் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பஞ்சர் கடைத் தொழில் மிகவும் ஆபத்தான தொழில். தமிழக அரசு எங்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும். தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பஞ்சர் பார்க்கும் வேலைக்கு வருவதில்லை. அதனால் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/tn-sec-2026-01-02-22-59-30.jpg)
நகராட்சி வாகனங்கள், போலீஸ் ரோந்து வாகனங்கள், அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் என எங்காவது வாகனங்கள் பஞ்சர் ஆகி நின்றால், தொலைபேசி அழைப்பு வந்த உடனே நாங்கள் சம்பவ இடத்திற்கே சென்று, பஞ்சரை ஒட்டி, வாகனங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறோம். அம்புலன்ஸ் வாகனத்திற்குக்கூட பஞ்சர் ஏற்பட்டால், அதையும் நாங்கள்தான் சரிசெய்கிறோம். இப்படி மக்கள் சேவை செய்து கொண்டிருக்கும் எங்கள் உயிருக்கு ஒரு உத்தரவாதம் வேண்டும். வருங்காலங்களில் இந்தத் தொழில் தொடர அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
பஞ்சர் கடைத் தொழிலாளர்கள் நாள்தோறும் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகின்றனர். அதிக காற்றழுத்தம் கொண்ட டயர்கள் திடீரென வெடிப்பது, கண்ணுக்கு தெரியாத உலோகத் துண்டுகள் பாய்ந்து காயம் ஏற்படுவது, காதுகளைப் பிளக்கும் சத்தத்தால் செவித்திறன் பாதிப்பு, வெயிலிலும் மழையிலும் சாலையோரத்தில் பணியாற்ற வேண்டிய நிலை போன்ற பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்கின்றனர். பெரும்பாலான பஞ்சர் கடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள், கண்ணாடிக் கவசம், பாதுகாப்புக் கை உறைகள் போன்றவை இல்லை. இதனால் சிறிய கவனக்குறைவினால் கூட பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Follow Us