கல்லூரி மாணவர் சுகைல் - குமரன்
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுகைல் (வயது 19). அவரது நண்பர் சோயல் ஆவார். இவர்கள் இருவரும் நேற்று (05.11.2025) இரவு ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக பைக் ரேஸ்ஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி மேம்பாலம் வழியாக அதிவேகமாகச் சென்றுள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த 2 இருசக்கர வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கல்லூரி மாணவர் சுகையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே சமயம் எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் இந்த விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனங்கள் மோதின. இதில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த குமரன் என்ற நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் மற்றொரு இளைஞரான சோயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து உயிரிழந்த இருவரின் உடலையும் உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொருபுறம் இந்த சம்பவம் தொடர்பாகப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் இரு இளைஞர்கள் அதிவேகமாக பைக் ரேஸ்ல ஈடுபட்டு வாகனத்தை ஓட்டி தங்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் சேர்ந்து எத்தனை பேர் பைக் ரேஸிஸ் ஈடுபட்டனர் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக் ரேசில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us