தலைநகர் டெல்லியில் கடந்த 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், உலக அளவில் 45 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். இது உலக அளவில் பேசப்பட்ட மாபெரும் ஏஐ தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியாகும். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த கண்காட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அபோது அவர்கள் பாஜகவிற்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். 

Advertisment

மேலும், அவர்களின் சட்டையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்றோரின் படம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் உலக அளவில் இந்தியாவின் பெருமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக இருப்பதாகக் கண்டங்களை பாஜகவினர் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் இந்த போராட்டத்தின் விடியோவை இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டது. அதில் அந்த இளைஞர்கள், "நாங்கள் ஏஐ மாநாட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. அரசு மக்களுக்கு எதிரான கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். 

Advertisment

இங்கு ஊடகம், அமைப்பு, பிரதமர் கூட நாட்டின் நலன் சார்ந்த கொள்கைகளில் சமரசம் ஆகியிருக்கலாம். ஆனால், நாட்டின் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலனைப் பேரம் பேச ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்திருந்தனர். அதே சமயம் இது போன்ற செயல்களால், உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் இவ்வாறு செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி நேற்று (20.02.2026) பாண்டிச்சேரியில் பாஜகவினர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருப்பினும், காங்கிரஸ் கட்சியினர் இது குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இன்று (21.02.2026) ஒன்று திரண்டு பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் பாஜகவிற்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, கட்சி அலுவலகத்தில் இருந்த பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினரும் கற்கள் மற்றும் காலணிகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரும் காயமடைந்தனர். அதோடு, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகினர். மோதல் பெரிய அளவில் பிரச்சனையாக மாறியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் காங்கிரஸ் கட்சியினரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், அந்த பகுதியில் பாஜகவினர் ஏராளமானோர் கூடினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisment