நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியைக் குஜராத்தைச் சேர்ந்த பட்டேல் என்ற நிறுவனம்  மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் அந்த பகுதியைச் சேர்ந்த ரோகித் (வயது4) என்ற சிறுவன் நேற்று (01.01.2026) மாலை இந்த பாதாளச் சாக்கடை குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிறுவனின் உடல் மீட்கப்பட்ட  நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

Advertisment

பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம் சிறுவன் உயிரிழப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது, “பாதாளச் சாக்கடை தோண்டப்பட்ட இடத்திலிருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் (31.12.2025) சென்றனர். அப்போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இருந்திருந்தால் சிறுவன் உயிரிழந்திருக்கமாட்டார். 

Advertisment

இந்த பகுதியில் 5 அடி அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊறியதால் அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு மோட்டார்களை பயன்படுத்தப்படவில்லை. அதோடு அன்றைய தினம் பணிகள் முடிந்த பிறகு பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திறந்த நிலையில் கயிறு கட்டப்பட்டு குழிகளை அப்படியே விட்டுள்ளனர். இரு பக்கமும் தடுப்புகள் (பேரிகாடு) அமைக்கப்படாமல் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த உயிரிழப்புக்குக் காரணமான ஒப்பந்த  நிறுவனத்தினர் சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கியுள்ளனர். 

இது தொடர்பாக இரவு ஒரு மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் முன்னிலையில் பெற்றோர்களிடம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதியாமல் மாணவர் தவறி விழுந்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Advertisment