கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் வாகனங்களைத் தூய்மைப்படுத்தும் தனியாருக்குச் சொந்தமான வாட்டர் வாஷ் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு தென்கீரனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் தியாகதுருகம் அருகே உள்ள கரிஷ் மாதக்கா என்ற பகுதியைச் சேர்ந்த சிறுவன் சாகில் (வயது 17) ஆகிய இருவரும் வழக்கம்போல் நேற்று (08.11.2025) வேலை செய்து வந்தனர்.
அதன்படி நேற்று இரவு இருவரும் பணியில் இருந்த போது எதிர்பாராதவிதமாக அரவிந்த் மற்றும் சாகில் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இருவரும் இன்று (09.11.2025) அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தியாகதுருகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் வாட்டர் வாஷ் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us