தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருபவர் ஏ.கே.எஸ். விஜயன். இவரது வீடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் வீட்டைப் பூட்டிவிட்டு அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று (30.11.2025) இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த நகை பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் இன்று (01.12.2025) காலை அவரது வீட்டிற்குச் சென்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்குச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்,இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
திமுகவின் முக்கிய பிரமுகராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் உள்ள ஒருவரது வீட்டிலேயே கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் 300 சவரன் தங்க நகைகள், பல லட்சம் மதிப்ப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.கே.எஸ். விஜயன் திமுகவின் விவசாய அணி மாநில செயலாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us