‘மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம்’   என்ற பயண பரப்புரையின் போது எடப்பாடி பழனிசாமி பேசும் உரையை திரித்து வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் அருகே செய்தியாளர்களைச் சந்தித்த இன்பதுரை, ‘அண்மையில் எடப்பாடி பழனிசாமி, பரப்புரையின் போது பேசிய சில கருத்துகளை பிரித்து திரித்து வெளியிடப்படுகிறது. இப்படி உரையைத் திரித்து வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். ‘தொடர்ந்து பேசுகையில், ‘பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் நிமிர்ந்து நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் சொன்ன மறுநாளே, நாங்குநேரி உள்ளிட்ட நான்கு சுங்கச்சாவடிகளில் உரிய கட்டணம் செலுத்தவில்லை என கூறி தமிழக அரசு பேருந்துகளை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகமே தலை குனிந்து நிற்கும் அவலம் உருவாகிவிட்டது. இது போன்ற நிலைகளை பார்க்கும் போது தமிழக அரசிடம் நிதி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இதன் அடிப்படையிலே கல்லூரி கட்டுவதற்கு தமிழக அரசிடம் நிதி இல்லாத காரணத்தினால் தான், இந்து அறநிலையத்துறை நிதியை பயன்படுத்தி, தமிழக அரசு கல்லூரியை கட்டுகிறதா என்ற கேள்வியை இபிஎஸ் எழுப்பினார். ஆனால், இதனை திருத்தி சில ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டனர். இனி இது போன்ற செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் எச்சரித்தார்.