Inbadurai MP issues notice to the Anti-Corruption Department Why didn’t file case against K.N. Nehru
தமிழக அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு வகித்து வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியது. அதாவது இந்த துறையில் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இந்த ஊழல் ரூ.1,020 கோடி வரை நடந்திருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியது. ஆனால், இதன் மீது தமிழக அரசும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக எம்.பி இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். ஆனால் இதையடுத்தும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என இன்பதுரை எம்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தார். அதோடு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிநாராயணனும், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் கே.என்.நேரு மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக எம்.பி இன்பதுரை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த நோட்டீஸில், ‘அமைச்சர் கே.என்.நேரு மீதான புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் வழக்கு பதியவில்லை?; நீதிமன்ற உத்தரவுகளை மீறுவது ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என லஞ்ச ஒழிப்புத் துறை மீது ஏன் வழக்கு தொடரக்கூடாது? சட்டமீறலையும் ஊழலையும் ஊக்குவிக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை தனது கடமைகளை செய்வதில் இருந்து தவறுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யாவிடில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நீதிமன்றத்திடம் கோருவோம்’ என்று அதிமுக எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார்.
Follow Us