கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் பட்டியலின சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இதையடுத்து, தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கெம்பனூரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணாநகர் பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் எண் 21 என்ற பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடைசி பேருந்து நிறுத்தமான அண்ணாநகரில் இருந்து பேருந்து புறப்படுவதால், பட்டியலின மக்கள் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அமர்ந்திருக்கும் போது, அவர்களுடன் நாங்கள் எப்படி சரிசமமாக உட்கார்ந்திருப்பது; சில நேரங்களில் அவர்கள் முன்பு நாங்கள் நின்று கொண்டு வரும் நிலை ஏற்படுகிறது” என்று ஆதிக்க சாதியினர், பேருந்தை அண்ணாநகர் வரை இயக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் காரணமாக, பேருந்து அண்ணாநகருக்கு முன்பே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் கெம்பனூர் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், அண்ணாநகருக்கு செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் எண் 21 என்ற பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், ஆணையத்தின் உத்தரவுக்கு மாறாக போளுவாம்பட்டி செல்லும் 64C என்ற பேருந்தை அண்ணாநகருக்கு இயக்கியும், இங்கு சாதி தொடர்பான பிரச்சனை இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்து விவகாரத்தை மூடி மறைத்துள்ளனர் என்று கூறுகிறப்படுகிறது. அத்துடன், இந்த விவகாரத்தின் பின்புலத்தில் திமுக, அதிமுக அரசியல்வாதிகள் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் மக்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு இந்த விவகாரம் குறித்து புகார் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து செயலர் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆணையம், அண்ணாநகர் வரை பேருந்தை இயக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சாதியைக் காரணம் காட்டி பட்டியலின மக்கள் பகுதி வரை அரசு பேருந்தை இயக்க விடாமல் நிறுத்தி வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us