பாஜகவின் துணைத் தலைவராக குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் குஷ்பு உள்ளிட்ட பலருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கி பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஒப்புதலின் கீழ் இந்த இந்த பட்டியலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
மாநில இளைஞரணி தலைவராக எஸ்.ஜி.சூர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் மாநில பொதுச்செயலாளராகக் கேசவ விநாயகம், வி.பாலகணபதி, இராமஸ்ரீநிவாசன், M. முருகானந்தம், A.P. முருகானந்தம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கராத்தே தியாகராஜன், வெங்கடேசன், அமர் பிரசாத்ரெட்டி உள்ளிட்ட 15 பேருக்கு மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர்கள் பட்டியலில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். கரு.நாகராஜன் மீண்டும் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். நடிகை குஷ்பு, தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா ஆகியோரும் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலப் பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரசில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி அதிருப்தி காரணமாக பாஜகவில் சேர்ந்திருந்த நிலையில் பாஜக தனக்கு முக்கிய பதவி தரும் என எதிர்பார்த்து வந்தார். சில மேடைகளில் தனக்கு பதவி கொடுக்கப்படாத வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்தமுறை அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேபோல் ஒரேநாளில் முடிவெடுத்து சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமாருக்கு பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கும் எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.