தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிரச் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியில் உள்ளன. இதனால் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் ‘தமிழ்நாடு தலை குனியாது’ என்ற தலைப்பில் பிப்ரவரி 1 முதல் 234 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை நடத்தத் திமுக தலைமை திட்டமிட்டது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “திமுகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 

Advertisment

இந்த பரப்புரையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம்  நடத்திட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் முதல் வாரம், முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பரப்புரையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது மார்ச் ஒன்றாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் ஆகும். எனவே  பிறந்த நாளுக்குப் பிறகு தன்னுடைய சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாகக்  கூறப்படுகிறது.  அதன் தொடர்ச்சியாக, மார்ச் எட்டாம் தேதி திருச்சியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநில மாநாட்டில் திமுகவின் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கப்பார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  திமுக சார்பில் இளைஞரணி மாநாடு மகளிர் அணி மாநாடு, பாக முகவர்கள் மாநாடு என பல்வேறு மாநாடுகளையும், வீடுதோறும் பிரச்சார இயக்கத்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment