தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி (12.08.2025) தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழா சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள கோபால் நகரில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அதன்படி முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

Advertisment

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 20ஆம் தேதி) முன்னிட்டு, தாயுமானவர் திட்டத்தில் அக்டோபர் 5, 6ல் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 

Advertisment

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6 தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.