தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு கூட்டணிக் கட்சியிடம் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக திமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதிக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு வார்த்தை தொடங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சிகளை தனித்தனியாக அழைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது என்ற முடிவை திமுக தலைமை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் பெரும்பான்மையாக முடிவுற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சென்னை மதுராந்தகம் அருகே பொதுக் கூட்டத்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us