சென்னையின் 2வது விமான நிலையமாகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது பரந்தூரைச் சுற்றியுள்ள தண்டலம், கொடவூர், தொடுவார், நெல்வாய், வளத்தூர், மடப்புரம் உள்ளிட்ட 20 கிராமங்களை ஒன்றிணைந்து புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 5 ஆயிரம் 750 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளதாக அரசு சார்பில் அறிவித்திருந்தது. 

Advertisment

இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகப் பொதுமக்களுக்கு 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை மிக விரைவாக நடைபெறும் எனவும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 1000 நாட்களுக்கு மேலாக பல கட்ட போராட்டங்களை ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisment

முன்னதாக பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா முதலிய துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.