சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நேற்று (14.10.2025) காலை 09:30 மணிக்குச் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தொடரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதோடு மறைந்த முன்னாள் கேரள முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளராகப் பதவி வகித்த சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை மறுநாள் வரை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று (15.10.2025) நடைபெறவுள்ள 2வது நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நேற்று இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொருபுறம் கரூர் துயரச் சம்பவம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.