ஓய்வூதியம் தொடர்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (03.01.2026) வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் ஓய்வூதிய அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். அதே சமயம் பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் சார்பில் இதனை நானும் வரவேற்கிறேன்.
அதேசமயம் நிதிக்குழு பரிந்துரையின்படி ஊதியம் உயர்த்தப்படுவதைப் போல ஓய்வூதியமும் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் நிதிக்குழு அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியும். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்தில் கொண்டு வருகிற சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் கல்வித்துறை, வேளாண்மை துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், காலமுறை ஊதியர்கள், தொகுப்பூதியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பையும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அரசு துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் சமமானவர்கள், சமவேலைக்கு சமஊதியம் பெறுபவர்கள் என்கிற சமத்துவ, சமூகநீதி உறுதிப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/anbumani-ramadoss-meeting-2026-01-03-21-34-55.jpg)
எனவே, விடுபட்ட கோரிக்கைகள் நிறைவேற்றவும், நிரந்தர பணியில் இல்லாத ஊழியர்கள் அனைவரின் நலன் காக்கும் அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், 56 மாதங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசு, பதவிக்காலம் முடிவடைவதற்கு 56 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியில் இருப்பது சதி மட்டும் தான்.
இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம்; நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறி வாக்குகளை வாங்குவதற்காகத் தான் இப்படி ஒரு ஏமாற்று வேலையை திமுக அரசு செய்கிறது. இதை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடக் கூடாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைக்கப்படும் போது பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை பாமக உறுதி செய்யும்” என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/mks-ramadoss-anbumani-2026-01-03-21-33-04.jpg)