சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கும்பலால் காரில் வைத்தே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

Advertisment

இது தொடர்பாக சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் மூன்று பேரை சித்தோடு போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையத்தில் பதுங்கி இருந்த மேலும் 5 பேரை சித்தோடு போலீசார் கைது செய்தனர். அதேசமயம் இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஜீவகன் உள்பட 4 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பிரபல ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றது என்று வழக்கு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் மோகன்ராஜ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ இந்த வழக்கில் திருப்பத்தை கொடுத்துள்ளது.

அந்த வீடியோவில், ''சேலத்தில் ஜான் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த கொலை வழக்கில் கொலை செய்தவர்களை போலீசார் அரெஸ்ட் செய்து விட்டார்கள். ஆனால் கொலை செய்ய சொன்னவர்கள் யார் என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. எனக்கு தெரியும். என்னுடைய முன்னாள் நண்பர்கள் தான் அவர்கள். ஜானினுடைய வீட்டருகே பாபுவின் சித்தி மகன் ராகுல் என்பவர் குடியிருந்ததார். அப்போது ஜான் ஜெயிலில் இருந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடிக்க வேண்டும் என ராகுலுக்கு பாபுவும், சங்கர் என்பவரும் திட்டமிட்டு  போட்டு கொடுத்தனர்.

ஆனால் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கி சிறைக்குச் சென்ற ராகுல், சிறையில் இருந்த ஜானை சந்தித்து ஷங்கரும் பாபுவும் உங்கள் வீட்டில் கொள்ளை அடிக்க எங்களுக்கு திட்டம் போட்டுக் கொடுத்தார்கள் என்பதை சொல்லியுள்ளார். இதையறிந்து கொண்ட ஜான் பாபுவையும் ஷங்கரையும் கொலை செய்ய சிறையில் இருந்து திட்டமிட்டுள்ளார். இதை அறிந்து கொண்ட பாபுவும் ஷங்கரும் முந்திக்கொண்டு  ஜானை கொலை செய்துள்ளனர்.

Advertisment

ஜானை கொலை செய்ய முடிவெடுத்த பாபு, செல்லத்துரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கையில் எடுத்து அந்த கொலைக்கு பழிக்குப் பழிபோல இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறார். செல்லதுரையின் தம்பியான சதீஷை பயன்படுத்திய பாபு, ஜானை கொலை செய்துள்ளார். இதை நான் வெளியே சொல்லி விடுவேன் என தெரிந்து என்னை மிரட்டுகிறார்கள். உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என கெட்டவார்த்தையில் திட்டுகிறார்கள், மிரட்டுகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் இந்த பதிவை சிஎம் செல்லுக்கும், டிஜிபி ஆபீஸுக்கும், சேலம் கமிஷனர் ஆபீஸுக்கும், செவ்வாய்ப்பேட்டை ஸ்டேஷனுக்கும், ஈரோடு கமிஷனர் ஆபீஸுக்கும், சித்தோடு ஸ்டேஷனுக்கும் அனுப்பி வைக்கிறேன். விசாரித்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.