பெரம்பலூர் அருகே கடந்த 24ஆம் தேதி வெள்ளைக்காளி என்ற பிரபல ரவுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சென்னை புழல் சிறைக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திருமாந்துறை டோல்கேட் அருகே மர்மக் கும்பல் சிலர் போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீசி வெள்ளைக்காளியைக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் இன்னொரு காவலர் காயமடைந்தனர். மேலும் தப்பிச் சென்ற மர்ம கும்பலை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.  

Advertisment

இந்த நிலையில் தான் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திவிட்டு பதுங்கியிருந்த கொட்டுராஜா உள்ளிட்ட இரண்டு ரவுடிகளை போலீசார் 26 ஆம் தேதி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக  இருவரையும்  காட்டுப் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு கொட்டுராஜா அங்கிருந்து தப்ப முயல,  அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  

Advertisment

இந்த சம்பவம் தொர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு புறமிருக்கு இங்கே ரவுடி வெள்ளைகாளியை பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம்... ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருத்தரிவான் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜபாண்டி மற்றும் அவரது உறவினர் விகே குருசாமி. இருவரும் 40 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தில் இருந்து வெளியேறி மதுரையில் தனித்தனியாகத் தங்களது குடும்பத்துடன் குடியேறியுள்ளனர். அதன்பிறகு ஆரம்ப காலக்கட்டத்தில் ராஜபாண்டி அதிமுக மதுரை கிழக்கு மண்டல சேர்மனாகத் தேர்வு செய்யப்பட்டார். அதே சமயம் அவரது உறவினர் விகே குருசாமி திமுக மதுரை கிழக்கு மண்டல சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் அரசியல் போஸ்டர் ஒட்டுதல், பொதுக்கூட்டம் என இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதலாகத் தொடங்கிய சம்பவம் தற்போது வரை நீரூ பூத்த நெருப்பு போல நீடித்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இரு தரப்பிலும் ஏகப்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ராஜபாண்டியின் ஆதரவாளரான முனுசாமியை விகே குருசாமி தரப்பினர் படுகொலை செய்தனர். இதற்குப் பழிதீர்க்கும் வகையில் கொல்லப்பட்ட முனுசாமியின் தம்பியும் ராஜபாண்டியின் ஆதரவாளரான ரவுடி வெள்ளைக்காளி, விகே குருசாமியின் ஆதரவாளர்கள் மூன்று பேரை கடந்த 2008 ஆம் ஆண்டு கொலை செய்தார். இந்தக் கொலைக்குப் பழிதீர்க்க விகே குருசாமி தரப்பு ராஜபாண்டி ஆதரவாளர்களைக் கொன்றது. பதிலுக்கு அவர்களும், ராஜபாண்டி தரப்பினரைச் சாய்த்தனர். இப்படி தென்மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாகப் பழிவாங்கும் படலம் தொடர்ந்து ஏகப்பட்ட கொலைகள் நடந்திருப்பதால், அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்துப் பேசினர். அப்போது விகே குருசாமி தரப்பு “போதும், எல்லாவற்றையும் நிறுத்திக்கலாம். 2 கோடி ரூபாய் கொடுக்கிறேன். இனி கொலைகள் நடக்க வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ரவுடி வெள்ளைக்காளியோ, “எங்களுக்கு பணமெல்லாம் பெரிசில்லை. நாங்க வேணும்னா விகே குருசாமியை போட்டுட்டு, அந்தக் குடும்பத்துக்கு 2 கோடி ரூபாய் தருகிறோம். அதன் பிறகு எல்லாம் சமாதானமா போகலாம்” என்று எச்சரித்திருக்கிறார்.

Advertisment

வெள்ளைக்காளியின் பேச்சு விகே குருசாமியை மேலும் ஆத்திரமடையச் செய்திருக்கிறது. ராஜபாண்டி மற்றும் ரவுடி வெள்ளைக்காளி இருவரையும் போட்டால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணி திட்டம் தீட்டியிருக்கின்றனர். இந்த விவகாரம் வெள்ளைக்காளிக்குத் தெரியவர, அவர்கள் தரப்பு குருசாமியை முடிக்க சமயம் பார்த்துக் காத்திருந்தனர்.அதன்படி, பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த விகே குருசாமியை ஒரு கும்பல் அவரது அறைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியது. அதில் அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆனால், அவர் உயிருடன் இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரைக்குத் திரும்பினார்.

இந்த நிலையில் விகே குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ரவுடி வெள்ளைக்காளி சேர்க்கப்பட்டார். ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த வெள்ளைக்காளி, சிறையில் இருந்துகொண்டே தனது கூலிப்படைகள் மூலம் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் கிளாமர் காளியைக் கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.