illegal in quarries at Virudhunagar on information in drone surveillance
‘குவாரிகளால் அதலபாதாள பள்ளங்கள், நிலநடுக்க அச்சம் நீங்காத விருதுநகர்!’ என்னும் தலைப்பில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளின் சட்டபூர்வ செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் டிரோன் மூலம் சிறப்பு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது 20 கல்குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை மேற்கொண்ட இந்த டிரோன் கண்காணிப்பு நடவடிக்கையின் போது நில அளவீடு, அனுமதிக்கப்பட்ட ஆழம், எல்லை மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் போன்ற அம்சங்கள் டிரோன் படங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அனுமதி அளிக்கப்பட்ட வரம்புகளை மீறி கற்கள் அகற்றப்பட்டிருப்பது உள்ளிட்ட சில முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. டிரோன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் தற்போது விரிவாக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
விதிமீறல் உறுதிப்படுத்தப்படும் கல்குவாரிகளுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதித்தல், செயல்பாட்டை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் சீரான பயன்பாட்டை உறுதி செய்வதே இந்த டிரோன் ஆய்வின் நோக்கம். தொடர்ந்து இதுபோன்ற கண்காணிப்புகள் நடைபெறும். விதிகளை மீறுபவர்களுக்கு எவ்வித தளர்வும் வழங்கப்படமாட்டாது என்று அத்துறை எச்சரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி செயல்பாடுகள் தொடர்பாக அதிகரித்து வரும் புகார்களின் பின்னணியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us