கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து அறிவித்து வந்த கும்பல்களை அண்மையாகவே மருத்துவத்துறை அதிகாரிகள் தேடிப் பிடித்து கைது செய்து வருகின்றனர். குறிப்பாக தர்மபுரி பகுதியில் இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி நடந்து வந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவித்து வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது. அதன்படி ஸ்கேன் செய்யும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று அக்கும்பலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் யார் யாரெல்லாம் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் பகுதியில் திமுக வார்டு உறுப்பினர் கவிதா மற்றும் அவருடைய தோழி இளவரசி ஆகியோருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. திருப்பத்தூர் பூங்குளம் பகுதிக்குச் சென்ற கள்ளக்குறிச்சி போலீசார் கவிதா, இளவரசி ஆகிய இருவரையும் கைது செய்தனர். கருக்கலைப்பு செய்வதற்காக தயார் நிலையில் இருந்த மூன்று கர்ப்பிணி பெண்களையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தற்பொழுது கவிதா மற்றும் அவருடைய தோழி இளவரசி ஆகியோரிடம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மருத்துவருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.