மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இந்த பயணத்தின் போது இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2022 நடந்த இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் சென்ற ராகுல் காந்தி, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இங்கேயும் அங்கேயும் இந்திய ஒற்றுமைப் பயணத்தைப் பற்றி மக்கள் கேட்பார்கள். அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் என்ன வேண்டுமானாலும் கேட்பார்கள். ஆனால் சீனா, 2,000 சதுர கி.மீ இந்தியப் பகுதி கைபற்றியது குறித்தும், 20 இந்திய வீரர்கள் கொன்றது குறித்தும், அருணாச்சலப் பிரதேசத்தில் நமது வீரர்களை தாக்கியது குறித்தும் ஒரு கேள்வி கூட அவர்கள் கேட்க மாட்டார்கள். ஏன், இதைப் பற்றி இந்திய பத்திரிகைகள் கூட அவர்களிடம் ஒரு கேள்வி கூடக் கேட்பதில்லை. இது உண்மையல்லவா? இதையெல்லாம் இந்த தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதுவும் தெரியாது என்று பாசாங்கு செய்யாதீர்கள்” என்று கூறினார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்று ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம், ராகுல் காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது, ‘நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ, அதை நாடாளுமன்றத்தில் சொல்லாமல் சமூக ஊடகப் பதிவுகளில் ஏன் சொல்ல வேண்டும்? 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதி சீனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் ஏதேனும் நம்பகமான ஆதாரங்கள் உள்ளதா? எதுவும் இல்லாமல் ஏன் இந்த அறிக்கைகளை வெளியிடுகிறீர்கள். நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், இதையெல்லாம் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். பேச்சு சுதந்திரம் என்பதற்காக எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பேசக் கூடாது’ என்று கண்டித்து, ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.