If you see a beautiful woman...! Controversial speech by Congress MLA Photograph: (CONGRESS MLA)
மத்தியப் பிரதேசத்தில், பண்டேர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்து வருபவர் பூல் சிங் பரையா. இவர் சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்று அம்மாநிலத்தின் அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பேசிய கருத்துக்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்கள் மற்றும் பிற சமூக அமைப்புகளிடம் இருந்து கடுமையான கண்டனத்தை பெற்றுள்ளது.
"பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடப்பதற்கு சாதி மற்றும் மத சடங்குகளே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய சமூகங்கள் சார்ந்த பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு பழங்கால ஆன்மிக புத்தகங்களில் கூறப்பட்ட கருத்துக்களே தூண்டுதலாக அமைகின்றன. இத்தகைய மோசமான கருத்துக்களை கொண்ட பழங்கால நூல்களில் உள்ள திரிக்கப்பட்ட நம்பிக்கைக் கட்டமைப்புகளால், இந்த குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவிலான பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர்.
மேலும், ருத்ரயாமள தந்திரம் என்ற நூலில், சில குறிப்பிட்டச் சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக செய்யும் பாலியல் வன்முறை, ஒரு ஆன்மீக யாத்திரை செல்வதற்கு சமமான புண்ணியத்தைத் தரும் என்று கூறுகிறது. இதுபோன்ற கருத்துக்களால், யாத்திரைக்குச் செல்ல முடியாதவர்கள், இந்த புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது போன்று அந்த குறிப்பிட்ட சமூக பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ய முற்சிக்கிறார்கள். இருப்பினும், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஒரு ஆணால் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்யமுடியாது. எனவே தான் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய இயலாதவர்கள், குழந்தைகளை வன்கொடுமை செய்கிறார்கள். அவ்வாறு, இந்த செயலில் ஈடுபடுபவர்கள் இதனை ஒரு வெகுமதிக்காக செய்கிறார்கள். அதோடு, சாலையில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால், அது அவரது மனதைத் திசைதிருப்பி, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யத் தூண்டும்," என்று அவர் பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, "அவர் பேசிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள், அந்த கருத்துகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். "எந்த வகையில், எந்தப் பாலியல் வன்கொடுமை நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. பாலியல் வன்கொடுமை செய்பவர் ஒரு குற்றவாளி. அதை சாதி அல்லது மதத்துடன் தொடர்புபடுத்த முடியாது. பாலியல் வன்கொடுமை ஒரு கொடிய குற்றம், அதை நியாயப்படுத்த எடுக்கும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பல சமூக அமைப்புகளும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன. குறிப்பாக அகில இந்திய பிராமண சங்கத்தின் மத்தியப் பிரதேச பிரிவு, இந்த கருத்துகளைக் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், அப்பிரிவின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா, "இத்தகைய கருத்துக்கள் பெண்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமதிப்பது போன்றது" எனக் கூறியுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியான பாஜக இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதன் நீட்சியாக, மத்தியப் பிரதேச பாஜக ஊடகப் பொறுப்பாளர் ஆஷிஷ் அகர்வால், "இந்தக் கருத்துக்கள் தற்செயலாக பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல, மாறாக ஒரு தீவிரமான சித்தாந்த வெளிப்பாடு. குற்றவியல் மற்றும் பிறழ்ந்த மனநிலையின் பிரதிபலிப்பு. பெண்களை 'அழகு' என்ற தராசில் நிறுத்துவதும், தலித் மற்றும் பழங்குடிப் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை ஒரு புனிதமான செயல் என்று வர்ணிப்பதும் பெண் வெறுப்பு, தலித் விரோத சிந்தனை மற்றும் மனிதநேயத்தின் மீதான நேரடித் தாக்குதல் ஆகும். ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்திற்கு வருகை தரும் இந்த நேரத்தில், காங்கிரஸின் "அரசியலமைப்பைக் காப்போம்" பிரச்சாரத்திற்கு பின்னால் உள்ள உண்மையான சித்தாந்தம் இதுதானா?, பரையாவை உடனடியாக மன்னிப்புக் கேட்க வைத்து கட்சியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது இத்தகைய சிந்தனைக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிறது என்பதைத் தெளிவாக ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Follow Us