சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணையைத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலூரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் திருப்புவனம் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''வரும் எட்டாம் தேதி அஜித்குமாரின் அம்மாவை நேரில் பார்க்க இருக்கிறேன். அரசே 5 லட்சம் தான் கொடுக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து செத்தால் பத்து லட்சம் கொடுக்கிறது. காவலர்கள் அடித்து செத்தால் ஐந்து லட்சம் தான் கொடுக்கிறது. எளிய மகன் நானே அஜித்குமார அம்மாவுக்கு 5 லட்சம் கொடுக்கிறேன். என்ன இது? அவ்வளவுதான் உயிருக்கு மதிப்பா? நிகிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அதுவரை என்னுடைய போராட்டம் தொடரும். வரும் எட்டாம் தேதி அஜித்குமாரின் அம்மாவை சந்திக்க இருக்கிறேன்'' என்றார்.