'If you ask a question, you should just answer it, not say you are opposed' - Seeman interview Photograph: (ntk)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் 'விஜய் உங்களுக்கு கூட்டணி வர அழைப்பு விடுத்தாரா?' என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், ''விஜய்யையோ தமிழக வெற்றிக் கழகத்தையோ எதிர்க்க நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை. நான் கட்சி ஆரம்பித்து சரியாக 15 ஆண்டுகள் கழித்து தான் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். பல தேர்தல்களை சந்தித்து 8.22 சதவிகிதம், 36 லட்சம் வாக்குகளை தொட்ட பிறகு தான் அவர் அரசியலுக்கு வருகிறார். தனித்து நின்று நிலையான அங்கீகரிக்கப்பட்ட கட்சியான பிறகு அவர் வருகிறார். எனக்கு ஏன் அவர் அழைப்பு கொடுக்க வேண்டும்?
நான் 16 வருஷமாக களத்தில் இருக்கிறேன். யார் பெரியவர் என்று சொல்லுங்கள். கோட்பாட்டளவில், அனுபவத்தில், வயதில் என்னை விட எட்டு வயது சின்னவர். நான்தான் மூத்தவன். நான் கூப்பிட்டு தான் விஜய் வரவேண்டும். விஜய் கூப்பிட்டு நான் போக முடியாது. நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் கேள்விதான் கேட்பார்களே தவிர விமர்சனம் செய்ய மாட்டார்கள். நீங்கள் வைக்கின்ற கோட்பாடுகள் எவ்வளவு தவறாக இருக்கிறது என்பதை கேள்வி கேட்பார்கள். திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று சொல்கிறீர்களே எப்படி? இரண்டும் எதிர் எதிர் சித்தாந்தம்.
நீங்கள் எல்லாவற்றிற்கும் காரணம் ஈவேரா தான் என்பீர்கள். அவர் அல்ல பெரியார் எங்களுக்கு அதற்கு முன்னாடி 1008 பெரியார்கள் இருக்கிறார்கள் என்பது எங்கள் கோட்பாடு. இதில் முரண்பாடு இருக்கிறது அல்லவா? நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள் 'மதச்சார்பற்ற சமூக நீதி' என விஜய் சொல்கிறார். சமூக நீதி வகுப்புவாத பிரதிநிதித்துவம் எதற்காக கொண்டுவரப்பட்டது. உயர்ந்த மதம் தாழ்ந்த மதம் என்று வந்ததா? அல்லது உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என வந்ததா? அப்பொழுது மதச்சார்பற்ற சமூக நீதி என்று சொல்கிறீர்கள். மதச்சார்பற்ற சமூக நீதி என்பது சரியாக இருக்கிறதா? தவறாக இருக்கிறது. இதற்கு கேள்வி கேட்டால் பதில்தான் சொல்ல வேண்டும் எதிர்க்கிறோம் என்று சொல்லக்கூடாது.
ஜாதி, மதம், இனம் என்று பிரிப்பார்கள் என்று மாநாட்டில் விஜய் பேசுகிறார். மொழி என்று பிரிப்பார்கள் என்றால் மொழி வழியாக மாநிலங்களை பிரித்ததை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லையா? உலகெங்கிலும் மொழி வழியாகத்தான் தேசிய இனங்கள், நிலங்கள் உருவாகியுள்ளது. மொழிதான் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறிவியல், அரசியல் ஆகியவற்றிற்கு அடிப்படை. ஆனால் மொழி, இனம் என்று பிரிப்பார்கள் என்று எப்படி பேசுகிறீர்கள். எனவே முன்னாடி இருப்பவர்களுக்கு தவறான கோட்பாட்டை சொல்லிக் கொடுக்கக் கூடாது. கேள்வி கேட்டால் பதில் தான் சொல்ல வேண்டும் அதை எதிர்க்கிறார்கள் விமர்சிக்கிறார்கள் என்று பேசக்கூடாது'' என்றார்.
Follow Us