திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது இளைஞர் ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகியது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.13 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை தனிப்படை போலீசார் பிடிக்க முடியாமல் திணறினர்.
இன்றோடு 14 நாட்களாக தனிப்படை போலீசார் சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை வருகின்ற ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இதே நபர் போன்ற உருவ ஒற்றுமை மற்றும் உடை ஒற்றுமை உடைய நபரை பிடித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட ஒரே உருவ ஒற்றுமை இருப்பதால் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகிது.
சிறுமி தரப்பும் உறுதி செய்த நிலையில் அந்த நபர்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேற்குவங்கத்தை சேர்ந்த அந்த நபர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபாவில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபரை தாபா நிர்வாகம் பலமுறை பணியில் இருந்து நீக்கியதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஊர் சுற்றுவதை இந்த நபர் வாடிக்கையாக கொண்டிருந்ததும், வழக்கம் போல 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஊர் சுற்றச் சென்ற அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்படும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''விசாரணையில் நல்ல பாசிட்டிவ் டெவலப்மென்ட் இருக்கிறது. இனிமேல் இந்த கேஸை விசாரித்துவிட்டு மேற்பட்ட விஷயங்களை உங்களுக்கு தெரியப்படுத்துவோம். அவருடைய அடையாளம் நாம் தேடப்பட்ட குற்றவாளிக்கு மேட்ச் ஆகிறது. சில விஷயங்கள் மேட்ச் ஆகிறது. எல்லாவற்றையும் இப்பொழுதே சொன்னால் விசாரணை பாதிக்கப்படும். இது ரொம்ப சென்சிடிவ் ஆன கேஸ் என்பதால் நீங்கள் வந்திருப்பதால் இதை தெரியப்படுத்துகிறோம். இந்த தகவல் தான் இப்போதைக்கு வெளியே சொல்ல முடியும். விசாரித்துவிட்டு ரிமாண்ட் பண்ணுவது கஸ்டடியில் எடுப்பது உள்ளிட்டஅடுத்தகட்ட சட்ட நடவடிக்கையாக எடுப்போம். அது உங்களுக்கு தானாகவே தெரிந்து விடும். விசாரித்ததில் அவர் சொந்த ஊர் என சொல்கிறார். ஆனால் அதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர் என்ன தொழில் செய்கிறார். அவர் சொல்வது மேட்ச் ஆகுதா இல்லையா என்பது குறித்து விசாரிக்க வேண்டி இருக்கிறது. இன்னும் ஒரு நாள் டைம் கொடுங்க இன்னும் தெளிவாக உங்களுக்கு தகவல்களை தெரிவிப்போம். குற்றவாளியின் பெயர் என்னவென்று விசாரித்துவிட்டு இரவு சொல்கிறோம்'' என்றார்.