லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏ சான்றிதழுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பின்பு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதேநேரம் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதால் பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், 'திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள்... அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும். கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடி இருப்பார். கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும்.
திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து,சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.