நாளை மறுநாள் 18ஆம் தேதி (18.12.2025. வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம். மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தவெக கட்சி தலைவர் விஜய்யின் 'ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அக்கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அங்கு வரும் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்களை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கட்சி தரப்பிலும் செங்கோட்டையன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் பேசுகையில், ''வருகின்ற 18ஆம் தேதி அன்று விஜய் வருகை தருகிற நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்திருக்கிறது. குறிப்பாக காவல்துறை என்னென்ன வேண்டுகோள் வைத்தார்களோ அதைக் காட்டிலும் கூடுதலாக பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. வந்து செல்கின்றவர்களுக்கு தனியாக பாஸ் அல்லது ஐடி கார்டு, கியூ ஆர் கோட் கிடையாது. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து விஜய் உரையை கேட்கலாம். இதற்காக உறுதியாக பணியாற்றிய அத்தனை பேருக்கும் முதல் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளிவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என யாரும் சொல்லவில்லை. காவல்துறை வேண்டுகோள் வைத்திருக்கிறதே தவிர நாங்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அதிகமான கூட்டம் விஜய்க்கு வரும் என்ற முறையில் எல்லா மாவட்டமும் இங்கே கூடினால் இந்த இடம் தாங்காது. காவல் துறையால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்ற முறையில் தான் அவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களே தவிர வேற ஒன்றுமில்லை. எங்களுக்கு எல்லோரும் வர வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்'' என்றார்.
'நாளைக்கு முக்கிய முன்னாள் அமைச்சர்கள் யாராவது வர வாய்ப்பு இருக்கிறதா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.
'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீங்கதான் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தீங்க,பயணத் திட்டங்களை அமைத்து கொடுத்தீங்க அதேபோல் விஜய்க்கும் தொடர்ச்சியாக பயணத் திட்டங்கள் வகுப்பீர்களா?' என்ற கேள்விக்கு, 'விஜய் விருப்பப்பட்டால் அதையும் செய்வேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/a5844-2025-12-16-18-28-25.jpg)