தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே பெருவாரியாக கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி , ‘’அதிமுகவின் வெற்றிக்கு உங்கள் எழுச்சியே சாட்சி. குட்டியப்பா என்ற நல்ல எம்.எல்.ஏ.வை பெற்ற சட்டமன்ற தொகுதி இது. இந்த தொகுதிக்கு என்ன தேவை, எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கிருஷ்ணமுரளி குட்டியப்பா.
திமுக ஆட்சியிக் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போலீஸ் எஸ்.ஐ.யையே வெட்டிக்கொலை செய்துள்ளனர். இது சாதாரண விஷயமல்ல, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிரூபணம் ஆகிவிட்டது. மக்களைக் காக்க வேண்டிய போலீஸுக்கே இந்த நிலைன்னா, மக்களுக்கு யார் பாதுகாப்புத் தருவது?
கோவையில் எஸ்.ஐ அறையில் புகார் கொடுக்க வந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு மோசம் என்பதை உணரவேண்டும். காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இதுக்கெல்லாம் என்ன காரணம்? போதை ஆசாமிகள்தான்.
கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா அமோக விற்பனை. அதை தடுக்கத் திராணி இல்லாதது, இந்த திமுக அரசு. நான் பல முறை போதை குறித்துப் பேசினேன் அப்போதே முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு தகுதியில்லாத முதல்வர் நம்மை ஆள்கிறார். தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்டது.
அதுவே இன்று இப்படியிருக்கக் காரணம் அரசியல் தலையீடு. நாடு மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டைக் காப்பாற்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். இன்று சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. இது விவசாயத்தை நம்பி வாழும் பகுதி, வியாபாரிகள் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் பாதுகாப்பாக இருந்தனர்.
ரவுடிகள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டது, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்துக்குச் தப்பிச்சென்றனர். ஆனால், இன்று ரவுடிகள் தாராளமாக நடமாடுகிறார்கள், நாட்டில் கொலை, கொள்ளை நடக்கிறது. போதைப் பொருட்களைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இதற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘குஜராத்தில் போதைப் பொருள் விற்கவில்லையா?’ என்று கேட்கிறார். தமிழ்நாட்டுக்குத்தான் செல்வப்பெருந்தகை தலைவர். அதனால் தமிழ்நாட்டைப் பற்றி பேசுங்கள். மற்ற மாநிலங்கள் பற்றி பேசுவது என்றால் நாடாளுமன்றத்தில் பேசுங்கள். 39 எம்பிக்கள் என்ன செய்கிறார்கள்?
அவர்களுக்கு அங்கு பேசுவதற்குத் தில்லு திராணி இல்லை. தமிழ்நாட்டில் நடப்பதைப் பேசாமல் ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறார். அதிமுகவை அவதூறாகப் பேசுகிறார்கள். 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா, நான் முதல்வர்களாக இருந்தோம். மதச்சண்டையோ, ஜாதிச்சண்டையோ நடைபெற்றதா? அமைதிப்பூங்காவாக இருந்தது.
இதனை சிறுபான்மை மக்கள் உணரவேண்டும். இதே திமுக 1999 மற்றும் 2001ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது, மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணிவைத்தால் மட்டும் மதவாதக் கட்சியா? தவறான கருத்தைப் பரப்புகிறார்கள். அதிமுக மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. நாட்டு மக்கள் வளமோடு வாழ வேண்டும் என்பதே அதிமுக லட்சியம். இஸ்லாமிய மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தோம், நோன்புக் கஞ்சிக்கு 5400 மெட்ரிக் டன் அரிசி இலவசமாகக் கொடுத்தோம். நாகூர் தர்கா சந்தனக்கூடு சந்தனமரம் கொடுத்தோம், ஹஜ் மானியம் 12 கோடி ரூபாய் ஒதுக்கினோம், சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், இருசக்கர வாகன மானியம், வக்ப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளிவாசல் புனரமைப்பு மானியம், கஜா புயலால் பாதிப்படைந்த நாகூர் தர்காவுக்கு புனரமைப்பு நிதி கொடுத்தோம், சிறுபான்மை மேம்பாட்டுக் கழகம் அமைத்தோம்.
2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் திமுக அவருக்கு எதிராக வாக்களித்தது என்பதை நீங்கள் உணர வேண்டும். கண்ணியமிகு காயிதே மில்லத்துக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்ததும் அதிமுக அரசு தான். அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது. வாக்குக்காக இவற்றை எல்லாம் சொல்லவில்லை. அனைத்து மதத்தையும் சமமாகப் பார்க்கக்கூடிய கட்சி என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவதூறாக திமுக கூட்டணி பேசுவதை நம்பவேண்டாம்.
கிறிஸ்தவ மக்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தோம், தேவாலய புனரமைப்பு நிதி, ஜெருசலேம் புனித பயண நிதி, கல்வி உதவித்தொகை வழங்கினோம், 37 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உரிமைத் தொகை வழங்கினோம். இப்படி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு அரணாக இருந்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம். இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம், வறட்சி நிவாரணம் கொடுத்தோம், பேரிடர் பயிர்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம், மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். அதிமுக திட்டங்களை திராவிட மாடல் அரசு கைவிட்டது. தாலிக்குத் தங்கம், திருமண உதவித் திட்டம் கொடுத்தோம். குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்கு திருமணம் நடக்க உதவினோம், மீண்டும் அதிமுக மலரும்போது இந்த திட்டம் தொடரும்.
மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க ஏதுவாக லேப்டாப் கொடுத்தோம். 7300 கோடியில் 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களூக்கு லேப்டாப் கொடுத்தோம். அதையும் நிறுத்திவிட்டனர், அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் 10 ஆண்டுகாலம் கல்வி சிறக்க வேண்டும் என்பதற்காக தொலைநோக்கோடு சிந்தித்து அம்மாவும், நானும் 67 கலைக் கல்லூரி கொடுத்தோம், 17 அரசு மருத்துவக் கல்லூரி கொடுத்தோம், 5 பொறியியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி என நிறைய கல்லூரிகளைக் கொண்டுவந்தோம். ஏழை மாணவர்களும் மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காக 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்தோம். அதன்மூலம் 2,818 பேர் இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர் ஆகிட்டாங்க. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா கொண்டுவந்தோம். அதை இன்று பூட்டிவைத்துள்ளனர். இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. திமுகவால் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாவது கொண்டுவர முடிந்ததா? நான் சொன்னது போன்று பட்டியல் போட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இத்தனையும் பார்த்துவிட்டு அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வது நியாயமா?தென்காசி என்கிற புதிய மாவட்டத்தை உருவாக்கித் தந்தேன். தமிழ்நாடு முழுவதும் 6 புதிய மாவட்டம் உருவக்கினேன், இந்த நான்காண்டில் ஒரே ஒரு புதிய மாவட்டமாவது உருவாக்கினீர்களா? ஒன்றும் முடியாது பொம்மை முதல்வர். நான் சாதனைகள் செய்தேன், அதை சொல்கிறேன். நீங்களும் அப்படி சொல்வதை விட்டுவிட்டு, எடப்பாடி பாஜகவுக்கு அடிமையாகிவிட்டார் என்பதையே சொல்லிகொண்டு இருக்கிறார். ஸ்டாலினால் வேறு ஒன்றும் சொல்ல முடியாது.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மின்கட்டணம் 67% உயர்த்துவிட்டது. வரிகளும் கிடுகிடுவென ஏறிவிட்டது. குப்பைக்கும் வரி போட்டுவிட்டார். வரி மேல் வரி போட்டு வாட்டி வதைக்கு அரசு தேவையா?அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஏழை, தாழ்த்தப்பட்டோருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும். தீபாவளி அன்று பெண்களுக்கு சேலை கொடுக்கப்படும். ஸ்டாலின் எங்கு சென்றாலும் அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்கிறார்.
அவருக்காக இந்த கடையநல்லூர் தொகுதிக்கு நாங்கள் செய்த சிலவற்றை மட்டும் சொல்கிறேன். கடையநல்லூர் தனி தாலுகா, புதிய கலை அறிவியல் கல்லூரி, புதிய அரசு தொழில்பயிற்சி நிலையம், செங்கோட்டையில் தாலுகா அலுவலகம், சாலை விரிவாக்கபணிகள் செய்து கொடுத்தோம். திமுகவினர் குண்டாறு அணை நீர்த்தேக்கம் உயரம் அதிகரிக்கப்படும் என்று சொனதைச் செய்யவில்லை. பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதாகச் சொல்லி அமைக்கவில்லை, மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைப்பதாகச் சொல்லி செய்யவில்லை, கொப்பறைத் தேங்காய் காயவைப்பதற்கு மின் உலர் சாதனம் கொடுக்கவில்லை, தென்காசியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளக் கொள்ளை நடக்குது, அதை தடுத்து நிறுத்தவில்லை. அந்த கனிமளக் கொள்ளையே திமுகவினரால் தான் நடக்கிறது, அத்தனையும் மக்களுக்குத் தெரியும். விவசாயப் பெருமக்கள் மலையடிவாரத்தில் விவசாயம் செய்கிறார்கள். அடிக்கடி யானை உள்ளிட்ட வன விலங்குகளால் பயிருக்குப் பாதிப்பு ஏற்படுகிறது, அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அதுவும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு 119 கோடி கொடுத்து கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகத் திறக்க முடியவில்லை. ஸ்டாலினுக்கு கை வலி போலிருக்கிறது. ஏனெனில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதால் திறக்க மாட்டார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு மாவட்ட ஆட்சியர் கட்டிடம் திறக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பை பை ஸ்டாலின்” என்று முடித்தார்.