இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், “இந்தியாவுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். அது வேறு வகையான ஒப்பந்தமாக இருக்கும். அதன்படி, நாம் இந்தியாவிற்குள் சென்று அங்கு போட்டி போட முடியும். இதுவரை, இந்தியா தன் நாட்டிற்குள் வேறு யாரையும் வர அனுமதித்ததில்லை. ஆனால், இந்தியா அதை செய்யப் போகிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அதைச் செய்தால், மிகக் குறைந்த வரி விதிக்கும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வோம்” என்று கூறினார்.
அதன்படி, அமெரிக்காவும் இந்தியாவும் பல வாரங்களாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்து வருவதாகவும், ஆனால் அதற்கு இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களை இந்திய சந்தையில் அதிக அளவில் அணுக வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். மற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் அவர் அடிக்கடி இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் இறக்குமதி பொருட்களுக்கு 25% வரிகளை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்காட்லாந்திலிருந்து வாஷிங்டனுக்குத் திரும்பும் வழியில் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்பிடம், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. ஏனென்றால் மற்ற நாட்டை விட இந்தியா அதிக வரிகளை விதிக்கிறது. இருநாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும்” என்று கூறினார். இதனையடுத்து இந்தியாவுக்கு 20% முதல் 25% வரை விதிகள் விதிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், “ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன்” என்று கூறினார்.