தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படுதீவிரம் அடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்திருக்கிறது.
இன்று சென்னை விமானநிலையம் வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக 'ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறதே அது நடக்குமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், ''இப்போது இருப்பதே நல்ல பலம்'' என்றார். 'அப்போது ஓபிஎஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்பதுதான் உங்கள் கருத்தா?' என செய்தியாளர்கள் கேட்க, ''அப்படி எல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேர்தல் பணிகள் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நிச்சயமாக எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நல்ல வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. எங்களுக்குள்ளே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளிடம் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். அடிமட்ட தொண்டர்கள் வரை எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து தொண்டர்களும் அவ்வளவு சந்தோஷமாக உள்ளார்கள்'' என்றார். 'ஓபிஎஸ் உங்கள் கூட்டணியில் இணைவாரா?' என்ற கேள்விக்கு ''அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்'' என பதிலளித்தார்.
அதேநேரம் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் 'அதிமுக மீண்டும் ஒன்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மேலே கையை காட்டி 'ஆண்டவன் மனசு வைத்தால், உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் அதிமுக ஒன்று சேரும்' என ஓபிஎஸ் பதிலளித்துவிட்டு வேறெதுவும் பேசாமல் மவுனமாகவே சென்றார்.
முன்னதாக 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என ஓபிஎஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/739-2026-01-27-17-50-44.jpg)