விருதுநகர் மாவட்டத்தில் அண்மையாகவே அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகேயுள்ள சின்ன காமன்பட்டியல் செயல்பட்டு வரும் 'கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ்' என்ற பட்டாசு ஆலையில் கடந்த 01.07.2025 அன்று காலை வழக்கம்போல் பணிகள் தொடங்கிய பொழுது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு வந்த விருதுநகர் எஸ்.பி கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/03/a4255-2025-07-03-10-51-46.jpg)
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையை கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்! மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.