'If I had wanted to, I would have become President' - Ramadoss speech Photograph: (pmk)
பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
Advertisment
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு உரிமை மீட்பு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன்படி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக தனது உரிமை மீட்பு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் ராமதாஸ் திண்ணை பிரச்சாரத்தினை இன்று (10.09.2025) தொடங்கியுள்ளார்.
திண்ணைப்பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராமதாஸ் பேசுகையில், ''நான் எந்த பதவிக்கும் போகவில்லை. எந்த பதவியையும் நான் விரும்பவில்லை. கவுரவ தலைவர் ஜி.கே.மணி சொன்ன மாதிரி நான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகவே ஆகி இருக்கலாம். இப்பொழுது துணை ஜனாதிபதி கூட தமிழர் தானே. நான் ஜனாதிபதியாக ஆகி இருக்கலாம். எல்லா பிரதமர்களும் எனக்கு நண்பர்கள். மோடி இப்பொழுது வந்தால் கூட என்னை கட்டிப்பிடித்துக் கொள்வார். ஆனால் நான் எனக்கு எதுவும் வேண்டாம் என் மக்கள் நன்றாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என இருக்கிறேன். அதனால் நான் எம்எல்ஏ ஆக மாட்டேன். ஆறுமுகம் இருக்கிறாரே இவரை இரண்டு முறை எம்எல்ஏ ஆக்கினேன். எனக்கு முன்னால் பேசிய ஜி.கே.மணியை நான்கு முறை எம்எல்ஏ ஆக்கினேன். இப்பொழுது ஜி.கே.மணி எம்எல்ஏ தான்.
சபாநாயகர் உட்காரு உட்காரு என்று சொன்னால் கூட நம்ம ஜி.கே.மணி கேட்க மாட்டார் பேசிக்கொண்டே இருப்பார். மக்கள் பிரச்சனையை தான் பேசுவார். வேறு எங்கு போய் பேச முடியும். இப்படி எல்லாம் உங்களுக்காக நாங்கள் நாளும் உழைக்கின்ற நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை என சத்தியம் பண்ணி இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நான் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து இவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார வைத்து அழகு பார்க்கிறேன். ஆனால் பெண்களாகிய நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இந்த ஆட்சி பொறுப்பை எங்களிடம் கொடுத்து விடலாம். எங்களிடம் கொடுத்து விட்டால் நாங்கள் உங்களுக்கு வேண்டியதை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் கேட்ட மூன்று வரத்தையும் சட்டத்தின் மூலமாக செய்திடுவோம். ஆனால் நீங்கள் கடைசி நேரத்தில் ஓட்டு போடும் போது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுறீங்க. அந்த காசு, கொடுப்பவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கு தெரியும். சாராயக் கடையில் சரக்கு விற்ற காசை உங்களுக்கு கொடுக்கிறார்கள். அந்தப் பணம் மறுபடியும் உங்ககிட்ட கொடுத்து உங்களை ஏமாற்றி ஓட்ட வாங்குகிறார்கள். அதனால் தான் நான் சொல்கிறேன் ஒரே ஒரு முறை என் பேச்சை கேளுங்கள். என் பேச்சை ஏன் கேட்க வேண்டும் உங்களை வாழ வைப்பதற்காக தான்'' எனறார்.