'முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்குகளில் போலீசார் புலன் விசாரணை நடத்தத் தயங்கினால் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடப்படும்' என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் பேசி இருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்று நீதிபதி வேல்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நேரத்தில் தான் நீதிமன்றம் முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன் பிறகு பொன்முடிக்கு எதிராக மூன்று காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தியதில் அவருடைய பேச்சு வெறுப்புபேச்சு வரம்பில் வரவில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகும்கூட 112 புகார்கள் கொடுக்கப்பட்டது. அவற்றின் புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டுப் பேசினார்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நீதிபதி வேல்முருகன், 'முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான இந்த புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்ய தயங்கினால் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற நேரிடும். பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது அமைச்சராக பதவி வகிப்பவர் ஏன் இதுபோன்று பேச வேண்டும். என்ன சொல்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும். கருத்துச் சுதந்திரத்தை பொறுத்தவரைக்கும் அந்த சுதந்திரத்தில் கட்டுப்பாடான நியாயங்கள் இருக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு என்று பேசுகிறீர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நல்ல விஷயங்களை பேசி இருக்கலாம்' என தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.