மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனிடம் 2000 கிலோ தங்கம் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
தேவநாதன் இயக்குநராக இருந்த 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்' நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டிருந்தனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தேவநாதன் யாதவ் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து தேவநாதன் உட்பட ஆறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வழக்கிலிருந்து வெளியே வர தேவநாதன் தரப்பு தொடர்ந்து ஜாமீன் பெறும் முயற்சியில் இறங்கி வருகிறது. தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 'தேவநாதன் யாதவிடம் சுமார் 2000 கிலோ தங்கம் இருக்கிறது. தேவநாதன் குறித்து தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களில் அந்த 2000 கிலோ தங்கம் குறித்த ஆவணங்கள் இடம்பெறவில்லை. அந்த 2000 கிலோ தங்கத்தை கைப்பற்றினாலே தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க முடியும்' என தெரிவித்தார்.
அப்பொழுது பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் அதிகமான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள் என தெரிய வந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் வாதம் குறித்து பதிலளிக்க தேவநாதன் யாதவ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை ஒத்தி வைத்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேவநாதனின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு இன்று (07/08/2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அவர் ஜாமீனில் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கான நிதியை திரட்ட முடியும். அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். ஜாமீனுக்காக கடுமையான எந்த நிபந்தனைகள் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள தயார்' என கோரிக்கை வைத்தார்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'தேவநாதன் தாக்கல் செய்துள்ள சொத்துக்களில் அதிகமானவை மூன்றாம் நபரின் பெயரில் உள்ளது. அதனால் சிக்கல் ஏற்படலாம்' என தெரிவித்தனர். அதேபோல காவல்துறை தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், 'தேவநாதனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தாக்கல் செய்த தேவநாதனின் சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என உரிமையாளர்களிடம், நிறுவனங்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு அதை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.