Advertisment

திமுகவிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அது தமிழ்நாட்டிற்கே பாதிப்பு - தமீமுன் அன்சாரி

q34

இந்தத் தேர்தலில் தி.மு.க.விற்கு ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பாக நாம்  கருத வேண்டும் என்று  தமீமுன் அன்சாரி கூறியிருக்கிறார்.

Advertisment

தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வகையராக்கள் தங்களுடைய சுய பலம் அறியாமல், பீடம் தெரியாமல் சாமியாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக அளவு ஒதுக்கீடு என்று மாப்பிள்ளை முறுக்காக நடந்துகொள்வதையெல்லாம் தி.மு.க. தலைரான ஸ்டாலின் அவர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்று கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அரசியலில் சீனியரான முதல்வர் ஸ்டாலினின் இன்னொரு முகத்தை இப்போதைய காங்கிரஸ் வகையராக்கள் அறிந்ததில்லை. அதை போகப் போக அவர்கள் உணர வேண்டிய சூழல் ஏற்படும் என்கிறார்கள் சீனியர் அரசியல்வாதிகள்.

Advertisment

ஆனால் தி.மு.க.வின் பிற கூட்டணிக் கட்சிளோ தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற வேட்கையில் தங்களுடைய கட்சியின் நிர்வாகிகளிடம் தேர்தலுக்கான வியூகத்தை வலியுறுத்துவதோடு இந்தத் தேர்தல் களம் அசாதாரணமானது. கவனமாகச் செயல்பட வேண்டும் என்று கட்சியினரை உஷார்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் தி.மு.க.வின் கூட்டணியான மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரான தமீமுன் அன்சாரி அண்மை நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன்னுடைய கட்சியினரை மாவட்ட வாரியாக பிரித்து மண்டல ஆய்வு கூட்டத்தினை நடத்தி வருகிறார். இந்தத் தேர்தல் களம் சூதுவாதுகளைக் கொண்டது. தமிழ் நாட்டின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் தி.மு.க.வை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தோடு போர்முனையில் பணிபுரிவதைப் போல களத்தில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்திவருகிறார். இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்றாலும் பொது இடங்கள், விவாத மேடைகள், பொதுக்கூட்டம் என்று அனைத்திலும் அடித்தட்டு மக்களுக்கான ஜனரஞ்சகமான அவர்களின் வாழ்வியலுக்குத் தேவையான அடித்தட்டுக் கருத்துகளையே அவர் வெளிப்படுத்துவதால் பொதுமக்களின் அனைத்து தரப்பிலும் அறியப்பட்டவராக இருக்கிறவர் தமீமுன் அன்சாரி.

பிப். 08 அன்று நெல்லையிலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் அப்னா பார்க் ஹோட்டலில் மதியம் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளின் தேர்தல் ஆய்வுக் கூட்டம், அந்த மண்டலத்திலுள்ள அக்கட்சியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் என்று சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்த ஆய்வுக் கூட்டத்திற்காக காலையிலேயே வந்த கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு சிறிது நேரம் விவாதித்துவிட்டு பின்னர் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது தன் கட்சியின் நிர்வாகிகளிடம் உரையாற்றிய தமீமுன் அன்சாரி, தமிழ்நாடு முழுவதிலும் கட்சியின் 4 அல்லது 5 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் கள நிர்வாகத்தில், தேர்தல் முறைகளில் அனுபவம் உள்ள நம் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். எடுத்த எடுப்பிலேயே முந்தையத் தேர்தல் போன்றில்லை இப்போதையக் களம். இந்தத் தேர்தலை நாம் போர்முனையாகக் கருத வேண்டும். மனித நேய ஜனநாயகக் கட்சி பங்கேற்ற கூட்டணியான தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும். நமக்குத் தேர்தலில் எதிர்பார்ப்பு, சீட் வாய்ப்பு என்பது லட்சியமல்ல. தி.மு.க.வை மீண்டும் அரியணையில் வைப்பதே நமது சிந்தனையாக இருக்க வேண்டும். நெல்லை மண்டலத்திலுள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்ற தீர்மானத்தை இம்மண்டலக் கூட்டத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், இந்தத் தேர்தல் தமிழ்நாட்டினுடைய வாழ்வுரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும், சமூக நீதியையும் பாதுகாக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தலாக சித்தாந்த ரீதியாக நாம் கருதுகிறோம். அப்படி ஒரு நெருக்கடியிலுள்ளோம். இந்தத் தேர்தலில் தி.மு.க.விற்கு ஏதேனும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அதை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பாக நாம் கருத வேண்டும். அப்படியான ஒரு காலகட்டம். தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சியால் சிறு பிணக்கு என்றாலும் அதை நாம் பொருட்படுத்தவே கூடாது. நமக்கு கூட்டணியின் வெற்றிதான் லட்சியம். மேலும் நமக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றியவைகளை தி.மு.க. தலைமையிடம் தெரியப்படுத்தியிருக்கிறோம். நமக்கு விருப்பமான தொகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் தருவார் என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய தமீமுன் அன்சாரி. மண்டல கூட்டத்திற்குப் பின்பு ரிலாக்ஸ்டாக இருந்த தமீமுன் அன்சாரியிடம் நாம் இதுகுறித்துப் பேசிய போது, இது நான்காவது மண்டலக் கூட்டம். தொண்டர்களிடம் மீண்டும் மீண்டும் நான் இப்படி வலியுறுத்தக் காரணம் இது சித்தாந்த ரீதியான தேர்தல் களம். இதில் தமிழ்நாட்டின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்தோடு போர்முனையில் பணிபுரிவதைப் போன்று களத்தில் ஈடுபட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

2021க்கு முன்பிருந்தே தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக செயல்பட்டு வரும் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு 2021ன் போது முதல்வர் ஸ்டாலின் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரிக்கு நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கியிருந்தார். ஆனால் அப்போதைய நேரத்தில் வி.சி.க. அத்தொகுதியைக் கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்தது. அந்த நேரத்தில் தமமுன் ஹன்சாரியிடம் பேசிய ஸ்டாலின் தொகுதியை விட்டுக் கொடுங்கள், பதிலாக வேறு தொகுதியை ஒதுக்கித் தருகிறோம் என்று வாக்குக் கொடுத்தார். ஆனால் காலச் சூழல் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆனாலும் தமீமுன் அன்சாரி கூட்டணிக் கட்டுப்பாட்டுக்கேற்ப தி.மு.க.வின் வெற்றிக்காக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தனக்கு ஏற்பட்ட தொகுதி இழப்பு பற்றி அவர் எந்த ஒரு இடத்திலும் சுட்டிக்காட்டியதில்லை. அதையே மனதில் கொண்ட முதல்வர் ஸ்டாலின் இந்தத் தேர்தலில் தலைவர் தமீமுன் அன்சாரிக்கு தேவையான தொகுதியை ஒதுக்கீடு செய்யும் திட்டத்தில் இருக்கிறார் என்கிறார்கள் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர்.

தேர்தல் புயல் நெருங்கிக் கொண்டிருக்க அ.தி.மு.க.வோ கூட்டணியைக் கூட இறுதி செய்ய முடியாமல் விமர்சனத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சூழலில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளோ ஓசையின்றி தேர்தல் களத்தில் ஜெட் வேகத்தில் செயல்படத் தொடங்கியிருப்பது எதிரணி மட்டத்தின் புருவங்களை உயர வைத்திருக்கிறது.

Election politics dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe