தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று (28.08.2025) வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் அரசு செயலாளராக சஜ்ஜன்சிங் ரா சவான் நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரசு கூடுதல் செயலாளராக கி. பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக ப.ஸ்ரீ. வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நல இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக ஷரண்யா அறி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ். பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு துணைச் செயலாளராக பானோத் ம்ருகேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.