போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டு தனக்கு தானே தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டாக ஐஏஎஸ் அதிகாரியான ரிங்கு சிங் ராஹி என்பவர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையில் தனது காதுகளைப் பிடித்து அமர்ந்து எழுந்து தனக்கு தானே தண்டனை கொடுத்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியான ரிங்கு சிங் ராஹி கூறியதாவது, ‘நான் முன்பு மக்களை கழிப்பறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தேன். ஆனால் சிலர் மறுத்து திறந்தவெளியில் சிறுநீர் கழித்ததால், அவர்களை காதுகளை பிடித்து தோப்புகரணம் போடுமாறு கூறினேன். அதே போல், சில பள்ளி குழந்தைகள் வளாகத்தில் நோக்கமின்றி சுற்றித் திரிவதை கண்டேன். அவர்களின் பெற்றோரும் இதேபோல் பொதுப் பொறுப்பின் ஒரு வடிவமாக காதுகளை பிடித்து தோப்புகரணம் போடுமாறு கூறினேன். இந்த நிலையில், தாலுகாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சந்திக்க சென்றிருந்தேன்.
அப்போது ஒரு எழுத்தர் கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழிப்பதைக் கண்டேன். அவர் அவரைத் தடுத்து நிறுத்தி அதைச் செய்ய வேண்டாம் என்றும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சொன்னேன். அதனால் அவரை நான், காதைப் பிடித்து தோப்புக்கரணம் போட சொன்னேன். அப்போது மற்ற வழக்கறிஞர்கள் ஏன் இது போன்று செய்ய வைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மீண்டும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவே இந்தச் செயல் என்று நான் விளக்கினேன். அப்போது தாலுகா வளாகமும் அழுக்காக இருப்பதாகவும், கழிப்பறைகள் அசுத்தமாக இருப்பதாகவும், தெரு விலங்குகள் சுற்றித் திரிவதையும் அவர்கள் சுட்டிக்காட்டி நீங்கள் தோப்புக்கரணம் போட முடியுமா? என கேட்டனர். அதற்கு ஆம் என்று சொன்னேன், அது எங்கள் தவறு என்பதால், நான் தோப்புக்கரணம் போட்டேன்” என்று கூறினார். ஐஏஎஸ் அதிகாரி ராஹியின் பொது மன்னிப்பு மற்றும் பொறுப்புணர்வு அடையாளச் செயலுக்குப் பிறகு வழக்கறிஞர்களின் போராட்டம் இறுதியில் கைவிடப்பட்டது.