'I wish you a speedy recovery' - Vijay posts Photograph: (tvk vijay)
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கள ஆய்வு நிகழ்ச்சி, ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டன.
அதேசமயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து 4வது நாளாக இன்றும் (24.07.2025) முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தும் வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் முதல்வர் நலம்பெற வேண்டும் என சமூகவலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்' என தெரிவித்துள்ளார்.