அண்மையில் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்திருந்தது அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாகி இருந்தது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் வைத்திருந்த கருத்தைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவை சந்தித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (18/09/2025) சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இன்றைய தினம் இரண்டு நாட்களாக நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. நான் கொஞ்சம் விளக்கமாக தெளிவாக இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். என்னைப் பற்றி அடிக்கடி விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும் எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆளுங்கட்சியாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு இரத்தின கம்பளம் விரித்தார்கள்.
'கேலோ இந்தியா' விளையாட்டுக்கு பிரதமர் மோடியை அழைத்து திமுக மிக ஆடம்பரமாக நடத்தி காட்டினார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டி அதையும் நேரடியாக தமிழ்நாட்டுக்கு பிரதமரை வரவழைத்து அந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி காட்டியவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின். அதேபோல் கலைவாணர் அரங்கில் ஆடல் பாடல் நிகழ்ச்சியோடு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்திக் காட்டியவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மோடி சென்னைக்கு வந்த பொழுது ஸ்டாலின் உட்பட அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டினார்கள். கருப்பு பலூன் விட்டார்கள். ஆளுங்கட்சியாக வந்த பிறகு வெள்ளைக்குடை பிடித்தனர். இதுதான் திமுகவின் நிலைப்பாடு.
நான் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். 16 ஆம் தேதி இரவு நான் அவரை நான் சந்திக்க சென்றேன். என்னோடு கட்சியினுடைய மூத்த நிர்வாகிகள் சேர்ந்து சந்தித்து விட்டு வந்தோம். அப்பொழுது இரவு 10 மணிக்கு எங்களோடு இருந்தவர்களிடம் நீங்கள் செல்லுங்கள் நான் பேசிவிட்டு வருகிறேன் என்று சொன்ன பிறகு அவர்கள் சென்றார்கள். நான் காலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அப்பொழுதும் அரசாங்க காரில் தான் பயணம் செய்தேன். நான் தமிழ்நாடு இல்லத்திலிருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான காரில் தான் என்றேன். நான் அமித்ஷா வீட்டிலிருந்து வெளியே வரும்போது என் முகத்தை துடைக்கிறேன். அப்பொழுது அதை எடுத்து அரசியல் செய்கிறீர்களே வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் வருத்தத்தோடு சொல்றேன். இனிமேல் ரெஸ்ட்ரூம் போனால் கூட உங்களிடம் சொல்லி விட்டு தான் போக வேண்டும் அப்படிப்பட்ட நிலைமைக்கு இன்றைக்கு அரசியல் போய்விட்டது.
19.12.2011 அன்று ஜெயலலிதா மூலம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி.தினகரன் அதன் பிறகு அவர் சென்னை பக்கமே வரவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகுதான் வந்தார். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைத்ததிலிருந்து டி.டி.வி.தினகரன் இப்படி என் மீது குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கி இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக சார்பில் அமித்ஷா கூறுவதும், அதிமுக சார்பில் நான் கூறுவதும் தான் இறுதி.'' என்றார்.