'I will welcome you in any form' - OPS interview Photograph: (ADMK)
'கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும்' என தற்போது செங்கோட்டையன் உயர்த்தி இருக்கும் குரல் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தொடர்ந்து ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லி கிளம்பிய செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
டெல்லியில் இருந்து கோவை வந்த செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஹரித்துவார் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றேன். ஆனால் டெல்லி சென்ற உடனே அமித்ஷாவை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் மூலமாக உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்கள் அங்கே பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை நாங்கள் அவரிடத்தில் எடுத்துச் சொன்னோம். ஆகவே அந்த கருத்துக்கள் அடிப்படையில் பல்வேறு விவாவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது'' என்றார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிலைப்பாட்டை ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றிருந்தார். மேலும் அவரை சந்திக்க இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் அதனை வரவேற்கிறேன். அதிமுக ஒன்றிணையாவிட்டால் திமுகவுக்கு தான் சாதகம்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள், 'அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி சரி என்று சொல்லிவிட்டால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ''பல பிரச்சனைகளை பற்றிப் பேச வேண்டி இருக்கிறது. ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அந்த நீதிமன்றத்தின் வழக்குகள் தர்மயுத்தத்தின் அடிப்படை. அதை நிறைவேற்றும் விதத்தில் நாங்கள் ஆலோசிப்போம்'' என்றார்.