Advertisment

“மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசிடம் பேசுவேன்” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி!

E

அதிமுகவில் சமீபத்தில்  இணைந்த நாகேந்திர சேதுபதியின்  அரண்மனைக்குச் சென்று மரியாதை நிமித்தமாக ராணி லட்சுமி நாச்சியாரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி.  இதனைத் தொடர்ந்து,  மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், ஆடு வளர்ப்போர் சங்கத்தினர் உள்ளிட்ட பலரையும் சந்தித்தார்.

Advertisment

அப்போது, அவர்களின் கோரிக்கைகளை கேட்ட பிறகு அவர்களிடம் பேசிய  எடப்பாடி பழனிசாமி, ‘’விசைப்படகு மீனவர்கள் தங்கள் பிரச்சினையைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், மீனவ நண்பர்கள் சிலர் சிறையில் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தீர்கள். சிறையில் இருக்கும் மீனவ நண்பர்களையும் அவர்களுடைய படகுகளையும் மீட்பதற்கு மத்திய அமைச்சரிடம் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறேன்.

Advertisment

மீனவர்களுக்கு அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். நிறைய படகுகளுக்கு மானியம் கொடுத்துள்ளோம். டீசல் மானியம் போன்ற உதவிகளையும், மீன்பிடித் தடைக்காலத்தில் நிவாரண உதவியும் வழங்கியுள்ளோம். மேலும் உங்கள் கோரிக்கைகளை எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.

விவசாயிகளுக்கு அதிமுகவின் 2016 முதல் 2021 ஆட்சியில் மட்டும் 2 முறை தொடக்க வேளாண் வங்கியில் பயிர்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் காப்பீட்டு திட்டம் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை கொடுத்துள்ளோம். ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம். விவசாயம், மீன்பிடி தொழில், கைத்தறி ஆகியவைதான் இங்கு பிரதான தொழில்கள். 70 சதவீதம் பேர் இங்கு விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நீராதாரம் முக்கியம். அதற்காகத்தான் குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்றினோம். கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டதால் அதிக நீர் தேக்கி வைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்தோம்.

இப்பகுதி மக்கள் விவசாய நீர் தேவைக்கு காவிரி - குண்டாறு திட்டத்தை தொடங்கிவைத்தோம். அந்த பனிகளை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் காவிரி குண்டாறு திட்டம் செயல்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக மாற்றுவோம். காவிரி நீர் இன்று வீணாக கடலில் கலக்கிறது. காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இப்பகுதிக்கு அந்த தண்ணீர் கிடைதிருக்கும். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால் இதைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள். 70 சதவீத மக்களுக்கு பலனளிக்கும் திட்டம் இது. இத்தனைக்கும் இதில் மத்திய அரசு நிதி கிடையாது. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி. 14,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதிமுக அரசு இதைச் செயல்படுத்தியது.

f

ஆடு வளர்ப்போர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறீர்கள். கால்நடை வளர்ப்பில் செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சேலம் மாவட்டத்தில் 1,000 கோடியில் 1,050 ஏக்கரில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கலப்பின ஆடுகள், கலப்பின மாடுகள் உருவாக்குவதில் அது முக்கிய பங்கு வகித்திருக்கும். அதில் ஒரு பகுதியை நான் திறந்து வைத்தேன். மீதி பணிகள் முடிவதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் மற்ற பணிகள் சரியாக முடியவில்லை.

இதுபற்றி நான் சட்டமன்றத்தில் பேசிய பிறகு, கடந்த ஆண்டு முதல்வர் கஷ்டப்பட்டு ரிப்பனை எடுத்து கட் பண்ணி இருக்கிறார். ஆனால், எதுவும் நடக்கவில்லை.  விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பதற்கு போடப்பட்ட பல பலனளிக்கும் திட்டங்களை முடக்கி வைத்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு கால்நடை பூங்கா திறக்கப்படும்.

கஜா புயல் ஏற்பட்டபோது மீனவர்களுக்கு பல உதவிகளை செய்தோம். படகுகள், வலைகள் வாங்கிக்கொடுத்தோம். விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்பட்டபோது அதிமுக அரசு உடனடியாக செயல்பட்டு நிவாரண உதவியை வழங்கியது. கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று பலரும் கூறினார்கள். அதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். கச்சத்தீவை யார் கொடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் காலகட்டத்தில், திமுக தமிழகத்தில் ஆண்டபோது கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தனர். மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதெல்லாம் கச்சத்தீவை பெற அழுத்தம் கொடுக்காதது ஏன் என்பதுதான் எங்களின் கேள்வி.

அதிமுகவைப் பொறுத்தவரை மத்திய அரசிடம் ஏதாவது பெறவேண்டும் என்றால் தயக்கமில்லாமல் கேட்டுப் பெறுவோம். உங்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் நிச்சயம் பேசுவேன் ’’ என்று உறுதியளித்திருக்கிறார்.

Ramanathapuram admk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe