மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாம்களைச் சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , இன்று (02.08.2025) தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம்களுக்கான ஸ்டால்களை ஒவ்வொன்றையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதோடு மருத்துவ முகாமிற்கு வருகை தந்திருந்தவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதாவது ஆண்டிப்பட்டி அருகே உள்ள தக்கம்பட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக வரவேற்பு பேனரை பார்த்துவிட்டு வந்த தங்க தமிழ்செல்வன் கோபமாகச் சென்று மேடையில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் புரோட்டோகால் படி நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் ஏன் வரவேற்பு பேனரில் வைக்கப்படவில்லை எனக் கோபமாகக் கேட்டுள்ளார்.
இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவி வழங்கும்போது அந்த நலத்திட்ட உதவி அட்டையை நான்தான் வழங்குவேன் எனத் தங்க தமிழ்செல்வன் கையில் கொடுக்காமல் அதனைப் பிடுங்கி மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி முன்னதாகவே முடிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.