திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணா பிறந்த நாளில் சிதம்பரம், மேலவீதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அங்கு கூடியிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்பதை சாராம்சமாக கொண்டு நீட் உள்ளிட்ட மாணவர்களை முடக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.
உரிய கல்வி நிதிக்காக போராடுவேன், தமிழ் மொழி பண்பாட்டு பெருமைக்கு எதிராக எந்த ஒரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன், உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன், வாக்குத்திருட்டை எதிர்த்து போராடுவேன், தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன்” என உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க இதனை அப்பகுதியில் இருந்த அனைவரும் திரும்ப உறுதிமொழியை வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இனிப்புகளை வழங்கினார்.
மேலும் அண்ணாமலை நகரில் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு உறுதி மொழியை வாசித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மூத்த சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், திமுக நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், குமராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்பாளர் பரந்தாமன், சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர்கள் கல்பனா, லதா, தாரணி,சுதா உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 1284 வாக்குச்சாவடிகளிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.