'I will not join as long as there are traitors' - Anbumani confirms Photograph: (pmk)
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இதற்கிடையில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான பா.ம.க எம்எல்ஏ அருள், அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறார்.
இன்று சேலம் வாழப்பாடி அருகே பா.ம.க அருள் சென்ற காரை நடுவழியில் மறித்து சிலர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ம.க எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாவட்ட, பெத்தநாயக்கம் பாளையத்திற்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வை முடித்து விட்டு வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது 50க்கும் மேற்பட்ட கும்பல், அருளின் காரை மறித்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம் என பகிரங்கமாக எம்.எல்.ஏ அருள் குற்றச்சாட்டை வைத்திருந்தார். 'இந்த தாக்குதலுக்கு அன்புமணியின் நடைபயணம் தான் காரணம். "டீசன்ட் அன்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ்" என்று, நாகரிக அரசியல் செய்வதாக மேடைக்கு மேடை போலியான வார்த்தைகளால் முழங்கி வரும் அன்புமணி தற்போது அநாகரிகமான அரசியலையும், வன்முறை அரசியலையும் கையில் எடுத்துள்ளார்' என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அன்புமணி தரப்பில் பாலு, அருள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்நிலையில் பென்னாகரம் பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ''ராமதாஸிடமிருந்து என்னை பிரித்து வைத்துள்ளனர். இன்று ராமதாஸை சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை நான் அங்கு சேர மாட்டேன். நான் அங்கே இணைய மாட்டேன். ராமதாஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதி. 45 ஆண்டு காலம் இந்த மக்களுக்காக, தமிழ் சமூகத்திற்காக தமிழ் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர். ஆனால் ராமதாஸை திசை திருப்பி அவருடைய மனதை மாற்றியுள்ளனர். அங்கே இருக்கின்ற இந்த துரோகிகள் இருக்கின்ற வரை நான் சேர மாட்டேன். இணைய மாட்டேன் என்று உங்களுக்கு நான் தெளிவுபடுத்துகின்றேன். வலியோடு, மன உளைச்சல், மன அழுத்தத்துடன் பேசிக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
Follow Us