நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

Advertisment

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு கடந்த முறை (12.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது திருமணம் செய்வதாகக் கூறி தன்னை சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சார்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும் தன்னை பாலியல் தொழிலாளி எனவும் சீமான் பேசியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில், முதலில் சீமான் தரப்பு மன்னிப்பு கோரும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கோரும் மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்றால் சீமான் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரித் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

Advertisment

அதோடு சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து விசாரணையை ஒத்தி வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (08.10.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாகப் பேசியதற்கு உச்ச நீதிமன்றத்தில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அதில், “எனது சொல் செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி மற்றும் காயம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறேன். அதோடு விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுகிறேன். மேலும் விஜயலட்சுமி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன். அதோடு அவரை தொடர்பு கொள்ளவும் மாட்டேன். எனவே தனது மன்னிப்பை ஏற்று இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்” எனப் பிரமாணப் பத்திரத்தில் சீமான் தெரிவித்துள்ளார். 

அப்போது விஜய லட்சுமி தரப்பில், “சீமான் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன். ஆனால் மன்னிப்பு கோர முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அப்படியெனில் சீமான் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்களும் (விஜயலட்சுமி) சீமான் மீது அவதூறு பரப்பி உள்ளீர்கள். அதற்கு மன்னிப்பு கேட்க என்ன தயக்கம்?.” எனத் கேள்வி எழுப்பினர். மேலும்,“இந்த வழக்கை இதற்கு மேல் இழுத்தடிக்க வேண்டாம். எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என விரும்புகிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து விஜயலட்சுமி தரப்பு, “இந்த வழக்கில் விஜயலட்சுமியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இரு தரப்பினரும் மன்னிப்பு கோரியுள்ளதால் இந்த வழக்கு முடித்து வைத்து உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment