தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளை கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisment

தனியார் ஹோட்டலுக்கு சென்ற டி.டி.வி.தினகரனை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பியூஸ் கோயலை சந்தித்த டி.டி.வி கூட்டணியில் இணைத்துக்கொண்டார். இந்த சந்திப்பில் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால் இந்த சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின்  முக்கிய அங்கமாக இருக்கும் அதிமுகவின் ஒரு நிர்வாகிகள் கூட கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்க கூடியதாக இருந்தது.

Advertisment

இந்நிலையில் என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரன் வந்ததை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ' தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என தெரிவித்துள்ளார்.