கடந்த 15.9.2022 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்  தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்றது.
Advertisment
இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90%க்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் கலந்து கொண்டார். நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''எங்களுக்கு எப்போதும் நீங்கள் தான். உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம். காலை உணவு திட்டத்தை நேரடியாக நானே கண்காணிக்கிறேன். இத்திட்டத்தின் மூலம் இனி 20 லட்சம் மாணவர்கள் சூடான சுவையான சத்தான உணவை சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்வார்கள். காலையில் இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டவுடன் இந்த குழந்தைகள் மாதிரி எனக்கும் எனர்ஜி வந்து விட்டது. எப்படி இன்று முழுக்க நீங்கள் ஆக்டிவா இருப்பீர்களோ அப்படி எனக்கும் இன்று ஆக்டிவான  நாள் தான்.
ஆக்டிவான டே மட்டுமல்ல, மனசுக்கு ரொம்ப நிறைவான நாள். இந்த திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால் இதைவிட மன நிறைவு என்ன இருக்க முடியும். அடுத்து இது மகிழ்ச்சிக்குரிய நாளும் கூட, ஏனென்றால் பஞ்சாபின் முதல்வர், என்னுடைய நண்பர் பகவத் மான் இங்கு வந்திருக்கிறார். அவரை தமிழக மக்கள் வரவேற்கிறார்கள். முன்னாடி இப்பொழுது நாடே திரும்பிப் பார்க்கும் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். இப்பொழுது இந்த திட்டத்தை தொடங்கி வைக்க பகவத்மான் வந்திருக்கிறார். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வருகை தந்திருக்கக் கூடிய பஞ்சாப் முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
Advertisment
கல்வி அறிவை வழங்குவதாக மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது வயிற்று பசியும் போக்கப்பட. நீதிக்கட்சி ஆட்சியில் சென்னையில் மாநகராட்சியில் படிக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியாக காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக காலை உணவு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். காரணம் என்னவென்று கேட்டால் நான் முதல்வராக பொறுப்பேற்ற சில நாட்களில் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு சென்ற பொழுது அங்கிருந்த  மாணவிகளிடம் என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டேன். நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார். சில மாணவிகள் டீ மட்டுமே குடித்தேன், பன் சாப்பிட்டேன் என்று சொன்னார்கள. இதையெல்லாம் மனசில் வைத்து தான் காலை உணவு திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாகவே அறிவித்தேன்'' என்றார்.