சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஜுரத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிகவை திமுக விழுங்கப் பார்க்கிறது' என எடப்பாடி பழனிசாமியை பேசியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், ''அதிமுகவை பாஜக விழுங்கி செரித்து விடும் என்று திரும்பத் திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புணர்வோடு சுட்டிக்காட்டியது. கவலையோடு சுட்டிக்காட்டியது. அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் அதை அப்படியே திருப்பி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கி விடும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அவருக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்று தான் நான் கருதுகிறேன்.
Advertisment
அவராகவே இந்த கருத்து சொல்வதாக என்னால் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்கு எதிராக நான் பேசுவதாக அவர் நினைக்கிறார் என்று கருதுகிறேன். அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்பதை கட்டாயம் நன்கு உணர்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் அதை உணர்வார். ஆனால் சேராத இடம் தன்னில் சேர்ந்து இருக்கிற சூழலில் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று கருதுகின்றேன்'' என்றார்.