நெல்லை மாவட்டத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பட்டதாரி இளைஞர் கவின் குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசுகையில், ''இந்த சம்பவத்தில் எஃப்ஐஆரில் இடம் பெற்றவர்களை கைது கைது செய்வதில் போலீசாருக்கு என்ன தயக்கம். அதுதான் கவினுடைய தந்தை எழுப்புகிற கேள்வி. புதிதாக யார் பெயரையும் நாங்கள் இணைக்கச் சொல்லவில்லை. சந்தேகத்தின் பேரில் யார் பெயரையும் போடச் சொல்லவில்லை. காவல்துறையே ஒத்துக்கொண்டு, ஏற்றுக்கொண்டு சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தை, தாயின் பெயரை இணைத்திருக்கிறார்கள் என்கிற பொழுது அவர்களை கைது செய்வதற்கு என்ன தயக்கம். இதுதான் கவின் தரப்பிலே அவருடைய தந்தை எழுப்புகிற கேள்வி. அதில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே தமிழ்நாடு அரசு காவல்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சுஜித்தின் தாயாரையும் சட்டப்படி கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. தென் மாவட்டங்களில் நடந்திருக்கின்ற அத்தனை கொலைகளுக்கு பின்னாலும் கூலிப்படையினரின் கைவரிசை இருக்கிறது, இருந்திருக்கிறது. சுர்ஜித்தின் சமூக வலைத்தள பக்கங்களை பார்க்கும் பொழுது அவர் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படத்தை போஸ்ட் செய்திருக்கிறார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கொடுவாள்களை ஏந்திக் கொண்டு இருக்கிறார். நாயை பிடித்துக் கொண்டு விரைவில் ஒரு சம்பவம் நடக்கின்றது என்று சிம்பாலிக் மெசேஜஸ் வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே சுர்ஜித் திடீரென ஆத்திரப்பட்டு இதைச் செய்யவில்லை. கவினோடு முரண்பட்டும், பகைத்துக் கொண்டும் உறவாடவில்லை. நம்பக்கூடிய அளவிற்கு நெருக்கமாக உறவாடி இருக்கிறார். அந்த நம்பிக்கை அடிப்படையில் தான் அவர் அழைத்ததன் அடிப்படையில் தான் அவரோடு கவின் சென்று இருக்கிறார். ஆகவே இது நீண்ட கால செயல்திட்டமாகத் தெரிகிறது. திட்டமிட்டு தான் இந்த படுகொலை நடந்திருக்கிறது. எனவே இதன் பின்னணியில் கூலிப்படையின் கைவரிசை இருக்குமோ என்று கவின் தரப்பில் சந்தேகப்படுகிறார்கள். எனவே காவல்துறையினர் குறிப்பாக சிபிசிஐடி போலீசார் முறைப்படி விசாரணையும் மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.